செய்திகள்

எகிப்து: சினாய் பகுதியில் தீவிரவாத தாக்குதல்- 6 ராணுவ வீரர்கள் பலி

Published On 2017-10-13 12:46 GMT   |   Update On 2017-10-13 12:47 GMT
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கெய்ரோ:

எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சி கடந்த 2013-ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பல பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறைக் களமாக நாடு மாறியுள்ளது. குறிப்பாக, செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

எதிர்பாராத வகையில் வாகனங்களில் கும்பலாக வரும் தீவிரவாதிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவத்தினர் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வன்முறையாட்டங்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சினாய் தீபகற்பம் பகுதிக்கு உட்பட்ட ஆரிஷ் நகரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளின்மீது இன்று துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
Tags:    

Similar News