செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த 2 தளபதிகளின் தலைக்கு பரிசு அறிவித்தது, அமெரிக்கா

Published On 2017-10-11 23:36 GMT   |   Update On 2017-10-11 23:36 GMT
ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த இரண்டு தளபதிகளின் தலைக்கு அமெரிக்கா 12 மில்லியன் டாலர் அறிவித்துள்ளது.
ஷிங்டன்:

ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் அமைப்பான ‘ஹிஸ்புல்லா’ இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்கா அறிவித்தது. ஈரானுக்கான புதிய கொள்கையை வகுத்து வரும் டிரம்ப் நிர்வாகம், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஹிஸ்புல்லா இயக்கத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தலைவர் தலால் ஹமியாவின் தலைக்கு 7 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.45 கோடி), ஹிஸ்புல்லா ராணுவத்தின் முக்கிய தளபதியான புவாத் சகிரின் தலைக்கு 5 மில்லியன் டாலரும் (சுமார் ரூ.32.5 கோடி) பரிசு அறிவித்து உள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் தேடப்படும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்று உள்ளனர்.

இந்த தளபதிகள் இருவருக்கும், ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் மேலும் அழுத்தம் அதிகரிக்கும் வகையில் மேற்கொண்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை இது என அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் கூறியுள்ளார். இந்த இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்காத நாடுகள் அதை செய்யுமாறு வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பயங்கரவாதிகளை தவிர, ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி, அல்கொய்தாவின் சிரியா கிளைக்கான தளபதி முகமது ஜோலானி ஆகியோரின் தலைக்கும் பரிசு அறிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News