செய்திகள்

ட்ரம்ப்புக்கு மனநலம் சரியில்லை - கிம் ஜாங் உன் விமர்சனம்

Published On 2017-09-22 13:54 GMT   |   Update On 2017-09-22 13:54 GMT
வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமர்சித்துள்ளார்.

பியாங்யாங்:

வடகொரியா தொடர் அணுஆயுத சோதனை நடத்திவருவதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதன்காரணமாக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பல வழியில் மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. 

இந்நிலையில், ஐ.நா. பொதுசபையில் கடந்த 19-ம் தேதி முதல்முறையாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை ராக்கெட் மனிதர் போல செயல்படுகிறார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

டிரம்ப்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பேசிய வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, ட்ரம்ப்பின் பேச்சை சுட்டக்காட்டி 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என அவர் நினைப்பது நாயின் கனவு போன்றது', என கூறியிருந்தார். 

இந்நிலையில் ட்ரம்பின் மிரட்டல் குறித்து கிம் ஜாங் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ட்ரம்ப் வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் நன்கு யோசித்து பார்க்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் அரசியல்வாதி போல பேசக் கூடாது. அவர் பேசுவது ஐநா பொதுமன்றத்தில் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார். ஒரு நாட்டை ஆளும் தகுதி அவருக்குக் கிடையாது அரசியல்வாதி என்பதை விட ரவுடி போலத் தான் அவர் செயல்படுகிறார். 

என்னையும் எனது நாட்டையும் உலக நாடுகள் முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டார். ட்ரம்ப் என்ன எதிர்பார்க்கிறாரோ அதற்கான பலன்களை அவரே அனுபவிப்பார். நான் நிச்சயமாகச் சொல்வேன் அவருக்கு மனநலம் சரியில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.  

இதனிடையே ட்ரம்ப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டார். நியூயார்க்கில் செய்தியாளர்களிட்ம் பேசிய அவர் பசிபிக் கடல் பகுதியில் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இதனால் கூடிய விரைவில் வடகொரியா அடுத்த அணுஆயுத சோதனை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News