செய்திகள்

லண்டன்: சுரங்க ரெயில் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக 17 வயது வாலிபர் கைது

Published On 2017-09-21 09:20 GMT   |   Update On 2017-09-21 09:20 GMT
லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக நேற்றிரவு 17 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லண்டன்:

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த 15-ம் தேதி காலை பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது. 

சப்தம் கேட்டு உயிர் பயத்துடன் ஓடிய பயணிகளில் 35 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாண்டன் ஹீத் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டியில் ஈடுபட்ட போலீசார், வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய 17 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை கைது செய்தனர். இத்துடன் இந்த வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தெற்கு லண்டன் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News