செய்திகள்

லண்டன்: சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக மேலும் 3 பேர் கைது

Published On 2017-09-20 10:07 GMT   |   Update On 2017-09-20 10:07 GMT
லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக இன்று மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டன்:

லண்டன் நகரின் சில பகுதிகளை இணைக்கும் வகையில் பூமிக்கு அடியில் செல்லும் சுரங்க ரெயில் (டியூப் டிரெயின்) சேவை இயங்கி வருகிறது.

கடந்த 15-ம் தேதி காலை பார்சன்ஸ் கிரீன் நிலையத்தை நெருங்கியபோது ரெயிலின் ஒரு பெட்டியில் இருந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த வெடி குண்டு பயங்கரமாக வெடித்து சிதறியது.

சப்தம் கேட்டு உயிர் பயத்துடன் ஓடிய பயணிகளில் 35 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அந்த பக்கெட்டுக்குள் சில ஒயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் பெருநகர லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. தங்கள் இயக்கத்தை சேர்ந்த மாவீரர் இந்த தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் அமாக் இணையதளம் குறிப்பிட்டிருந்தது.

லண்டன் சுரங்க ரெயில் தாக்குதல் தொடர்பாக 18 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக லண்டன் போலீசார் முன்னர் தெரிவித்திருந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடையை மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர். லண்டன் புறநகர் பகுதியான ஹவுன்ஸ்லோ என்ற இடத்தில் அந்நபர் பிடிபட்டதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

யஹ்யா பாரூக்

சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள நியூபோர்ட் நகரில் 25 வயது மதிக்கத்தக்க மேலும் ஒரு நபரை ஸ்காட்லேன்ட் யார்ட் போலீசாரின் தீவிரவாத தடுப்பு படையினர் நேற்று கைது செய்தனர். தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டு தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட நபர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் இரண்டாவதாக கைதான 21 வயது வாலிபரின் பெயர் யஹ்யா பாரூக் எனவும், அந்நபர் சிரியா நாட்டில் இருந்து லண்டனில் அகதியாக தங்கி இருந்தவர் என்றும் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள நியூபோர்ட் நகரில் சுமார் 30 மற்றும் 48 வயது மதிக்கத்தக்க மேலும் இருவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர். இவர்களுடன் சேர்த்து லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News