செய்திகள்

அமெரிக்காவை சாம்பலாக்குவோம்: வடகொரியா பகிரங்க மிரட்டல்

Published On 2017-09-15 05:28 GMT   |   Update On 2017-09-15 05:28 GMT
அமெரிக்காவை சாம்பலாக்குவோம், அணு ஆயுத தாக்குதல் நடத்தி ஜப்பானை கடலில் மூழ்கடிப்போம் என வடகொரியா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

சியோல்:

ஐ.நா. சபை மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 3-ந்தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்து 6-வது அணு ஆயுத சோதனை நடத்தியது. அதற்கு முன்னதாக ஐப்பான் மீது பறந்து செல்லும் வகையில் ஏவுகணை சோதனையும் நடத்தியது.

இது கொரிய தீபகற்ப பகுதியில் போர்பதட்டத்தை அதிகரித்துள்ளது. அதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா பொருளாதார தடை தீர்மானம் கொண்டு வந்தது. அதில் உறுப்பினர்களாக உள்ள 15 நாடுகளின் உதவியுடன் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

இது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் கொரிய ஆசிய பசிபிக் சமாதான கமிட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கேடு விளைவிக்கின்ற ஒரு கருவி என வர்ணித்துள்ளது. மேலும் ஜூசி எனப்படும் அணுகுண்டு வீசி ஜப்பானின் 4 தீவுகளை கடலுக்குள் மூழ்கடிப்போம்.

அமெரிக்கா மீதும் அணு ஆயுத சோதனை நடத்தி அதை சாம்பலாக்குவோம். இருளில் மூழ்கடிப்போம் என மிகவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவின் இத்தகைய மிரட்டல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News