செய்திகள்

சீனப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி மியான்மர் புறப்பட்டு சென்றார்

Published On 2017-09-05 08:11 GMT   |   Update On 2017-09-05 08:11 GMT
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
பீஜிங்:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒன்பதாவது மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கும் மோடி, வரும் 7-ம் தேதிவரை அங்கு தங்குகிறார்.

தலைநகர் நைபிடாவில் மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நாளை சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகான் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆனந்தா ஆலயம் மற்றும் பல பகோடாக்கள் சேதம் அடைந்தன.

சேதமடைந்த ஆனந்தா ஆலயத்தை புனரமைப்பு செய்யும் பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிகிறார்.

மேலும், இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழும் யாங்கூன் மற்றும் பாகான் பகுதிகளுக்கு செல்லும் அவர், அவர்களிடையே சிறப்புரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News