செய்திகள்

13 பேரை பலிகொண்ட பார்சிலோனா தாக்குதலில் வேனை ஓட்டிய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தகவல்

Published On 2017-08-21 22:18 GMT   |   Update On 2017-08-21 22:18 GMT
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்திய நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
மாட்ரிட்:

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோத விட்டு தாக்குதல் நடத்திய நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.



இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதாகவும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், இதில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதியை போலீசார் தேடி வந்தனர்.

தாக்குதலை நடத்திய காரை வாடகைக்கு வாங்கியவன் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ட்ரிஸ் ஒபகிர் (20) என்று கூறிய போலீசார், அவனது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் ட்ரிஸ் ஒபகிர் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், தாக்குதலை ஏற்படுத்திய வேனை ஓட்டிவந்த யூனுஸை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், மேற்கு பார்சிலோனாவில் நேற்று நடந்த என்கவுண்டரில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் உடனான சண்டையின் போது யூனுஸ் தன்னுடைய உடம்பில் வெடிகுண்டு பெல்ட் கட்டியதாக கூறப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் அதை பரிசோதித்த போது போலியானது என தெரியவந்தது எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News