செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோவில் கட்டுமானப்பணியில் சிறுவன் தவறி விழுந்து பலி

Published On 2017-08-20 00:45 GMT   |   Update On 2017-08-20 00:45 GMT
அமெரிக்காவில் இந்து கோவில் கட்டுமானப்பணியின்போது 45 அடி உயரத்தில் இருந்து 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
நியூயார்க்:

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில், ஹேமில்டன் என்ற இடத்தில் சுவாமி நாராயண் மந்திர் என்ற இந்து கோவிலில் கட்டுமானப்பணி ஒன்று நடந்து வந்தது.

இதில் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுமானப்பணியில் உதவினர்.

இந்த நிலையில் அங்கு கட்டுமானப்பணியின்போது 45 அடி உயரத்தில் இருந்து 16 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத வகையில் தவறி விழுந்தான். உடனடியாக அவன் அங்குள்ள உட் ஜான்சன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

பலியான சிறுவன் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் பற்றி வினய் லிம்பாசியா என்ற தன்னார்வ தொண்டர் கூறும்போது, “இந்த கோவில் பெரியதொரு கோவில் ஆகும். கட்டுமானத்துக்குள் அவன் தவறி விழுந்து விட்டான். அவனும், அவனது குடும்பத்தினரும் வழக்கமாக லேன்ஸ்டேல் என்ற இடத்தில் உள்ள கோவிலில் வழிபட்டு வந்தவர்கள். அந்த கோவிலிலும் கட்டுமானப்பணி நடந்து வருகிறது” என்றார்.

“சிறுவன் தவறி விழுந்து பலியாகி இருப்பது மிகவும் துயரமான ஒரு சம்பவம். இந்த வழக்கு விசாரணையில் ராபின்ஸ்வில்லே போலீஸ் விசாரணைக்கு உதவுவோம். பலியான சிறுவனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கோவில் நிர்வாகம் கூறி உள்ளது. 
Tags:    

Similar News