செய்திகள்

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்ததால் பரபரப்பு

Published On 2017-08-17 18:51 GMT   |   Update On 2017-08-17 18:51 GMT
ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து அணிந்து வந்தது பிற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கான்பெர்ரா:

ஆஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு பாராளுமன்ற செனட் சபையின் உறுப்பினரும் ஆவார். இந்த கட்சி அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா என்று அழைக்கப்படுகிற முகத்திரை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், பவுலின் ஹன்சன் பாராளுமன்ற செனட் சபைக்கு பர்தா அணிந்து வந்து, தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பர்தா அணிந்து வந்து அவர் தனது வழக்கமான இருக்கையில் அமர்ந்தபோது, அது பிற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.



உடனே ஆளுங்கட்சி மந்திரி ஜார்ஜ் பிராண்டிஸ், பவுலின் ஹன்சன் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அப்போது அவர், “ஹன்சனின் செயல், ஆஸ்திரேலியாவில் உள்ள 5 லட்சம் முஸ்லிம்களை அன்னியப்படுத்தி உள்ளது. அந்த சமுதாயத்தை ஒரு மூலையில் தள்ளி, அதன் மத அடிப்படையிலான உடையை கேலி செய்வது என்பது பயங்கரமான விஷயம். நீங்கள் செய்த இந்த செயலைப்பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

மேலும், பர்தாவுக்கு தடை விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜார்ஜ் பிராண்டிஸ் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஹன்சன், பர்தாவை அகற்றினார். 
Tags:    

Similar News