செய்திகள்

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்

Published On 2017-07-26 14:44 GMT   |   Update On 2017-07-26 14:44 GMT
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியுள்ளது.
லக்சம்பர்க்:

ஐரோப்பிய யூனியனில் கடந்த 2006-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டது.

இந்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது ‘2009-ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம், கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கியது.

இதனை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து நீக்கி இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த வன்முறை செயலிலும் ஈடுபட்டதற்கான ஆதாரம் அளிக்கப்படாததால் தடை நீக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிதி முடக்கம் தொடர்பான உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
Tags:    

Similar News