செய்திகள்

‘எச்-1 பி’ விசா விண்ணப்பங்கள் பிரிமியம் முறையில் பரிசீலனை - அமெரிக்கா மீண்டும் தொடங்கியது

Published On 2017-07-25 21:39 GMT   |   Update On 2017-07-25 21:39 GMT
‘எச்-1 பி’ விசாக்களை பிரத்யேகமாக வழங்குவதற்கு பின்பற்றப்பட்டு வந்த ‘பிரிமியம் பிராசசிங்’ மீதான பரிசீலனையை அமெரிக்கா மீண்டும் தொடங்கியது
வாஷிங்டன்:

அமெரிக்க குடியுரிமையின்றி, அங்கு தங்கி வேலை செய்வதற்கு இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்கள், இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த விசாக்களை பிரத்யேகமாக வழங்குவதற்கு பின்பற்றப்பட்டு வந்த ‘பிரிமியம் பிராசசிங்’ நடைமுறையை ஏப்ரல் 3-ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது.

இப்போது விரைவான பரிசீலனைக்கு உதவுகிற இந்த பிரிமியம் பிராசசிங் நடைமுறை உடனடியாக மீண்டும் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு கூறுகையில், “எச்1-பி விசா விண்ணப்பதாரர், உயர் கல்வி நிறுவனமாகவோ அல்லது லாப நோக்கமற்ற அல்லது உயர் கல்வி நிறுவனத்தின் அங்கமாகவோ, லாப நோக்கமற்ற ஆராய்ச்சி அமைப்பாகவோ அல்லது அரசு சார் ஆராய்ச்சி அமைப்பாகவோ இருந்தால், உச்ச வரம்பில் இருந்து விலக்கு பெற்று பிரிமியம் முறையில் பரிசீலிக்கப்படும். தகுதியுள்ள உச்சவரம்பு விலக்கு பெற்ற நிறுவனம் அல்லது அமைப்பின் ஊழியர் பயனாளி என்கிறபோது, அவர்களின் விசா விண்ணப்பமும் பிரிமியம் முறையில் பரிசீலிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1’ பி விசாக்கள் வழங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கும் இந்த விசா கூடுதலாக வழங்கப்படும். 
Tags:    

Similar News