செய்திகள்

ரஷியாவிடம் இருந்து மிக்-35 ரக போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டம்

Published On 2017-07-23 18:50 GMT   |   Update On 2017-07-23 18:50 GMT
ரஷியாவிடம் இருந்து மிக்-35 ரக போர் விமானங்களை இந்தியா வாங்குவது குறித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோ:

ரஷியாவின் மிக் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன், மிக் ரக விமானங்களை தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத்தின் மிக் ரக போர் விமானங்களை இந்தியா கடந்த 50 ஆண்டுகளாக வாங்கி பயன்படுத்தி வருகிறது. எந்தவொரு தனது புதிய தயாரிப்பையும், இந்தியாவுக்கு சப்ளை செய்வதில் இந்த நிறுவனம் ஆர்வம் கொண்டுள்ளது.

இந்த நிலையில், அந்த நிறுவனம் அதிநவீன மிக்-35 ரக போர் விமானங்களை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக, ஜூகோவ்ஸ்கை நகரில் நடந்த மாக்ஸ்-2017 விமான கண்காட்சியின்போது, மிக் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் தலைமை செயல் அதிகாரி இல்யா தாராசெங்கோ நிருபர்களிடம் பேசினார்.



அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் மிக் 35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். இதற்கான டெண்டரை இந்திய விமானப்படையிடம் இருந்து பெறுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இந்த விமானம் அதிநவீன நான்காம் தலைமுறை பன்னோக்கு போர் விமானம் ஆகும்” என கூறினார்.

அவரிடம், “மிக்-35 ரக போர் விமானம் வாங்குவதில் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நிச்சயமாக. அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்” என்றார்.

“இந்தியாவுக்கு இந்த விமானத்தை சப்ளை செய்வ தின் தற்போதைய நிலவரம் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “தற்போது நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம். தொழில் மற்றும் தொழில் நுட்ப ரீதியிலான குறிப்புகளின் அடிப்படையில் இந்தப்பேச்சு நடத்தப்படுகிறது. இது ஒரு புதிய விமானம் என்பதால், இந்தியாவின் தேவை என்ன என்பதை அறிந்து பேசுவதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். இந்தியாவின் தேவைக் கேற்ப அதன் தயாரிப்பில் தேவையான மாற்றங்கள் செய்வோம்” என்று பதில் அளித்தார்.

விமானத்தின் விலை என்ன என்பது குறித்தும் அவரிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், “நாங்கள் விமானத்தை மட்டும் விற்பனை செய்ய திட்டமிடவில்லை. அதைப் பயன்படுத்த பயிற்சி அளிப்போம். அது மட்டுமல்ல விற்பனை செய்தபின்னர் 40 ஆண்டு காலத்துக்கு பழுது பார்த்து தருவோம். அந்த வகையில் இந்த விமானத்தின் விலை சிக்கனமாக அமையும்” என பதில் அளித்தார்.

மேலும், “பிற போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, மிக் விமானத்தின் விலை 20-25 சதவீதம் மலிவானதாகவே இருக்கும். இதன் தொழில் நுட்ப குறிப்புகளைப் பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட ஐந்தாம் தலைமுறை விமானத்தைப் போன்று அமையும்” என்று கூறினார்.

Tags:    

Similar News