செய்திகள்

தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரை விட்ட தலிபான் தலைவரின் மகன்

Published On 2017-07-22 11:35 GMT   |   Update On 2017-07-22 11:35 GMT
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் இயக்க தலைவரின் மகன் ஹபீஸ் காலித், தற்கொலைப்படை தாக்குதலில் இறந்துவிட்டதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெஷாவர்:

ஆபகானிஸ்தானின் தென்பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் தலைவராக இருப்பவர் முல்லா ஹைபதுல்லா அகுண்ட்சடா. இவரது மகன் அப்துர் ரகுமான் (23) என்ற ஹபீஸ் காலித்.
மதரசாவில் படித்து வந்த ஹபீஸ் காலித், தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரை இழக்க வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் காரி யூசப் அஹ்மாதி கூறுகையில்,  “கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் தலைவரின் மகன் ஹபீஸ் காலித் பங்கேற்றான்.

கிரெஷ்க் நகரில் உள்ள ராணுவ முகாம் மீது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்தான். அந்த தாக்குதலில் காலித் இறந்தான். அவரது குடும்பத்தில் பலர் இதுபோல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி உயிரை விட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளார்.

தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் தலைவரின் மகன் இறந்தது தொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் முல்லா அக்தர் மொகமது மன்சூர் பலியானதை தொடர்ந்து, முல்லா ஹைபதுல்லா அகுண்ட்சடா தலிபான் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News