செய்திகள்

வெள்ளை மாளிகையின் புதிய ஊடகத்துறை செயலாளராக சாரா ஹக்காபி நியமனம்

Published On 2017-07-22 07:47 GMT   |   Update On 2017-07-22 07:47 GMT
அதிபர் டிரம்ப் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய செயலாளராக சாரா ஹக்காபி நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் தகவல் தொடர்பு துறையின் இயக்குநராக இருந்த மைக் டுப்க், அதிபர் டிரம்ப் நிர்வாகத்தோடு கருத்து மோதல் ஏற்பட்டு கடந்த மே மாதத்தில் ராஜினாமா செய்தார். இதனால், காலியாக இருந்த அப்பொறுப்புக்கு நியூயார்க்கைச் சேர்ந்த நிதியாளர் அந்தோனி ஸ்காராமுச்சியை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

டிரம்ப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளராக இருந்த சீன் ஸ்பைசர் அதிரடியாக ராஜினாமா செய்தார். சீன் ஸ்பைசர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தனது முடிவில் ஸ்பைசர் உறுதியால இருந்ததாகவும் செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில், புதிய ஊடகத்துறை செயலாளராக சாரா ஹக்காபியை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சாரா வெள்ளை மாளிகையின் துணை ஊடக செயலாளராக பொறுப்பு வகித்தார்.

மேலும், முன்னாள் செயலர் சீன் ஸ்பைசர் அருமையான மனிதர் எனவும் அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
Tags:    

Similar News