செய்திகள்

அமெரிக்கா ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 16 ஆப்கானிய வீரர்கள் பலி

Published On 2017-07-22 00:17 GMT   |   Update On 2017-07-22 11:53 GMT
தாலிபான்களை குறிவைத்து அமெரிக்க வான்படையினர் ஆப்கானில் நடத்திய தாக்குதலில் சிக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் 16 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தாலிபான் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள ஹெல்மந்த் மாகாணத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை குறிவைத்து நேற்று அமெரிக்க வான்படையினர் குண்டுகளை வீசினர்.

ஆனால், இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் 16 பேர் தவறுதலாக கொல்லப்பட்டனர். இதில் இரண்டு ராணுவ கமாண்டோக்களும் அடங்குவர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இது துரதிர்ஷ்டவசமாக நடைபெற்ற விபத்து எனவும், பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அமெரிக்க ராணுவத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.
 
இந்த செய்தியை ஹெல்மாண்ட் மாகாண கவர்னரின் செய்தித் தொடர்பாளர் உமர் ஸ்வாக் உறுதி செய்துள்ளார். ஆனால் உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நஜிப் தானிஷ் 12 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க படையினர் ஷாங்கின் நகரில் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதேபோல் கடந்த நவம்பரில் குந்தூஷ் நகரில் அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 ஆப்கானியர்கள் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News