செய்திகள்

பின்லேடனை துப்பாக்கியால் 3 முறை சுட்டு கொன்றேன்: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

Published On 2017-07-20 06:01 GMT   |   Update On 2017-07-20 06:01 GMT
அல்கொய்தா தலைவர் பின்லேடனை 3 முறை சுட்டு கொன்றதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது.

இதையடுத்து அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது.

பின்லேடனை கொல்ல சென்ற படையில் யார்-யார் இருந்தார்கள், அவர்கள் எப்படி தாக்குதல் நடத்தினார்கள் என்பது போன்ற தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரி ராபர்ட் ஓ நீல் இது சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதி உள்ளார். ராபர்ட் ஓ நீல் தற்போது ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

அவர் எழுதியுள்ள புத்தகத்தில், பின்லேடனை நான் தான் சுட்டுக் கொன்றேன். 3 முறை பின்லேடனை சுட்டேன். அதில் அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளார்.

தனது புத்தகத்தில் எழுதியுள்ள தகவல்கள் தொடர்பாக ராபர்ட் ஓ நீல் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிப்பதாவது:-

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்தில் தாக்குதல் நடந்தபோது நான் ஜெர்மனியில் அமெரிக்க படையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த காட்சிகளை நானும் டி.வி.யில் தான் பார்த்தேன்.

இதற்கு பின்லேடன் தான் காரணம் என்று கூறினார்கள். அப்போதே அமெரிக்கா பெரிய போருக்கு தயாராகும் என்று நான் கருதினேன். அதேபோல அமெரிக்கா போரில் ஈடுபட்டது. நானும் அதில் ஈடுபடுத்தப்பட்டேன்.

பின்லேடன் பாகிஸ்தானில் பதுக்கி இருப்பது தெரியவந்ததும் அவனை கமாண்டோ படை மூலம் கொல்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டது. இதற்காக ரகசியமாக படையை திரட்டினார்கள். அப்போது என்னையும் அதில் சேர்த்தனர்.

பின்லேடனை வேட்டையாட போகிறோம் என்று எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஒரு முக்கிய நிகழ்வுக்கு எங்களை தயார்படுத்துவதாக கூறினார்கள். இதற்காக கடுமையான பயிற்சியும் வழங்கினார்கள். சில திரைப்படங்களை காட்டி அதேபோல செயல்பட வேண்டும் என்று விளக்கினார்கள். இந்த பயிற்சி பற்றி குடும்பத்தினரிடம் எந்த தகவலும் தெரிவிக்க கூடாது என்றும் கூறினார்கள்.

பின்லேடனை வேட்டையாட செல்வதற்கு குறுகிய காலத்திற்கு முன்பு தான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதே நான் இந்த வேட்டைக்கு சென்றால் உயிரோடு திரும்பி வருவது அவ்வளவு எளிதானது அல்ல என்றே கருதினேன்.

ஏன் என்றால் பாகிஸ்தான் ராணுவமும் வலிமையானது. அவர்களிடம் ரேடார் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும் உள்ளன. எனவே பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் அவர்கள் எங்களை தாக்கி அழித்துவிடுவார்கள் என்று கருதினேன்.

உயிரோடு திரும்புவது கடினம் என்பதால் குடும்பத்தினரிடம் கூட ‘குட்நைட்’ சொல்வதற்கு பதிலாக ‘குட்பை’ என்று சொன்னேன்.

தாக்குதலுக்கு செல்வதற்கு முன்பு என் குடும்பத்தினரிடம் சென்று வந்தேன். அப்போது எனது இளைய மகள் விளையாடி கொண்டிருந்தாள். இதுதான் அவள் விளையாட்டை பார்ப்பது கடைசி என்று கூட கருதினேன்.

இந்த தாக்குதலுக்கு 400 பேர் தயார் படுத்தப்பட்டிருந்தோம். சம்பவத்தன்று ஆப்கானிஸ்தானில் இருந்து 2 ஹெலிகாப்டரில் வீரர்கள் அனுப்பப்பட்டோம். எங்களை தொடர்ந்து மற்ற உதவிகளுக்கு 4 ஹெலிகாப்டர்கள் வந்தன.

90 நிமிட பயணத்தில் அபோதாபாத் சென்றடைந்தோம். பின்லேடன் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்கள் எங்களை தரையிறக்கியது.

உடனடியாக அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றோம். அங்கிருந்த ஒரு கதவை குண்டுவைத்து தகர்க்க முயன்றோம். ஆனால் அது போலி கதவு என்று தெரிந்தது. மற்றொரு கதவை திறந்து உள்ளே சென்றோம்.

எங்களை பார்த்த ஒரு பெண் பின்லேடன் 2-வது மாடியில் இருப்பதாக கூறினார். நாங்கள் நுழைந்ததை பின்லேடன் பார்த்துவிட்டார். உடனே அங்கிருந்து பெண்களையும், குழந்தைகளையும் தன்னுடன் ஒன்றாக நிற்க சொன்னார். பின்லேடன் குண்டை வெடிக்க செய்து வீட்டை தகர்க்க போகிறார், நமது உயிரும் போக போகிறது என்று நான் கருதினேன். இருந்தாலும் நானும் கமாண்டோ வீரர்களும் பின்லேடன் அறைக்குள் அதிரடியாக நுழைந்தோம்.

பின்லேடன் இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி நின்று கொண்டிருந்தார். உடனே எனது துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டேன். 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்ததும் கீழே சாய்ந்தார். மறுபடியும் நான் சுட்டேன். மற்ற வீரர்களும் உடனடியாக சுட்டார்கள். நான் 3 முறை சுட்டதில் தான் அவர் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல் நடந்தபோது பின்லேடன் முன்புறமாக அவரது மனைவி நின்று கொண்டிருந்தார். இடது பக்கத்தில் மகன் நின்றார். இதுவரையும் நான் கைகளால் தள்ளிவிட்டு விட்டு பின்னர்தான் பின்லேடனை நோக்கி சுட்டேன்.

பின்னர் பின்லேடன் மகனிடம் நாங்கள் இனி என்ன செய்யட்டும் என்று கேட்டபோது, பின்லேடன் மகன் எந்தவித அதிர்ச்சியும் இல்லாமல் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.

அடுத்ததாக பின்லேடனின் உடலை எடுத்து வந்தோம். அங்கிருந்த எலக்ட்ரானிங் சாதனங்கள் உள்ளிட்ட சாதனங்களையும் எடுத்தோம். பின்னர் அனைவரும் ஹெலிகாப்டரில் ஏறி ஆப்கானிஸ்தானுக்கு புறப்பட்டோம்.

ஆப்கானிஸ்தான் எல்லையை அடைய 90 நிமிடம் ஆகும் என்பதால் பாகிஸ்தான் ராணுவ படைகள் எந்த நேரத்திலும் எங்கள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிடும் என்று கருதினோம். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் வந்ததும் எங்களுக்கு அதுபற்றி அறிவிப்பு செய்தார்கள். அதன்பிறகு தான் நாங்கள் நிம்மதி அடைந்தோம். பின்லேடன் உடலை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். அவர்கள் கப்பல் மூலமாக அவனது உடலை எடுத்து சென்றார்கள்.

இவ்வாறு ராபர்ட் ஓ நீல் கூறினார்.
Tags:    

Similar News