செய்திகள்

ஜாம்பியா: 40 ஆயிரம் வீடுகளை இருளில் மூழ்கடித்த பபூன் குரங்கு

Published On 2017-07-19 12:07 GMT   |   Update On 2017-07-19 12:07 GMT
கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதியில் மின்சார சாதனத்தை பபூன் குரங்கு சேதப்படுத்தியதால் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

லுசாகா:

கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் விக்டோரியா நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள தேசிய பூங்காவில் பலவிதமான உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த பகுதி அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இப்பகுதிக்கு லிவிங்ஸ்டோன் பகுதியில் உள்ள 180 மெகா-வாட் திறன்கொண்ட நீர்மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பூங்காவில் இருந்து நீர்மின் நிலையத்திற்குள் நுழைந்த பபூன் வகை குரங்கு ஒன்று நீர்மின் நிலையத்தில் உள்ள மின்சார சாதனத்தை தவறுதலாக தொட்டுள்ளது. இதன் காரணமாக குரங்கின் உடலில் மின்சாரம் பாய்ந்ததோடு மின்சார சாதனமும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த குரங்கிற்கு உடனடியாக பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தின் காரணமாக மின் சாதனம் சேதமடைந்ததை தொடர்ந்து லிவிங்ஸ்டோன் பகுதியில் சுமார் ஐந்து மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 40 ஆயிரம் வாடிக்கையாளர்களின் வீடுகள் இருளில் முழ்கியது. இதனால் அப்பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.
Tags:    

Similar News