செய்திகள்

உலகின் பழமையான ‘எமோஜி’ துருக்கியில் கண்டுபிடிப்பு: கி.மு. 1700-ஐ சேர்ந்ததாக இருக்கலாம் என தகவல்

Published On 2017-07-19 11:54 GMT   |   Update On 2017-07-19 11:54 GMT
உலகின் மிக பழமையான எமோஜியை துருக்கி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கார்காமிஸ் நகரத்தில் கண்டறிந்துள்ளனர்.
புதுடெல்லி:

‘எமோஜி’ என்பது போனில் குறுந்தகவல் அனுப்பும் போது சிரிப்பது மற்றும் அழுவது போன்ற அனைத்து மன எண்ணங்களையும் சிறிய ஸ்டிக்கர் மூலம் அனுப்பும் தனி பாஷை. இதில் முகம் போன்ற வடிவம் இடம்பெற்றிருக்கும். இது முகநூல், டுவிட்டர் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஜுலை 17 ஆம் தேதி உலக ‘எமோஜி’ தினமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையில் உலகின் முதல் மற்றும் பழமையான ‘எமோஜி’ சின்னம் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை துருக்கி மற்றும் இத்தாலியச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துருக்கியின் பழமையான நகரமான கார்காமிஸில் கண்டறிந்துள்ளனர். மண் கூஜாவின் மீது சிரிப்பது போன்ற ‘எமோஜி’ பொறிக்கப்பட்டிருந்தது. இது கி.மு. 1700-ம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இதை போன்று பழமையான பானைகள் மற்றும் பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

உலக ‘எமோஜி’ தினத்தையொட்டி கடந்த 17-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது. மேலும், கூடுதல் எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News