செய்திகள்

ஊழல் அம்பலம்: நவாஸ் ஷெரிப் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் போர் கொடி

Published On 2017-07-11 10:00 GMT   |   Update On 2017-07-11 10:00 GMT
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் அவரது சகோதரரும் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.
இஸ்லாமாபாத்:

பனாமா பேப்பர்ஸ் வாயிலாக கசிந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் அவரது சகோதரரும் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததால் சிறப்பு கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு கடந்த இரண்டு மாதமாக நடத்திய விசாரணை அறிக்கை நேற்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் இறுதி முடிவு எடுக்கும் முன்னர், பாகிஸ்தான் ஊடகங்களில் இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டது.

இந்நிலையில், ஊழல் செய்து வெளிநாடுகளில் சொத்துகளை குவித்து வைத்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷாபாஸ் ஷெரிப் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார்.



இந்த அறிக்கையை மையமாக வைத்து நான் பதவி விலக மாட்டேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முறையாக இந்த அறிக்கையின் விபரங்களை சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட பின்னர் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அரசியல் காழ்ப்புணர்வுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து விவாதிப்பதற்காக பாகிஸ்தான் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட வேண்டும் என சபாநாயகரிடம் மனு செய்ய பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதற்கு பாராளுமன்ற சபாநாயகர் அனுமதி அளிக்காதபட்சத்தில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில், தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நவாஸ் ஷெரிப்பை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் பதவி நீக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News