செய்திகள்

தீவிரவாதி பர்ஹான் வானி நினைவு நாள்: பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதி புகழாஞ்சலி

Published On 2017-07-09 08:11 GMT   |   Update On 2017-07-09 08:11 GMT
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா ஆகியோர் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இஸ்லாமாபாத்:

காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாட்டின் பல பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய ஹிஸ்புல் முஜாகீதின் தீவிரவாத இயக்கத் தளபதி பர்ஹான் வானி கடந்த ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த சம்பவத்திற்கு பிறகு காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.

பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.



இந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியை தியாகியாக சித்தரித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா ஆகியோர் அஞ்சலி செலுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளியிட்ட அறிக்கையில், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் குரலை மூர்க்கத்தனமான அடக்குமுறையின் மூலம் இந்தியாவால் அடக்கிவிட முடியாது. அங்கு நடைபெறும் சுதந்திரப் போராட்டத்துக்கு பர்ஹான் வானி சிந்திய ரத்தம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அவரது மரணத்தின்மூலம் தங்களது இலக்கை நோக்கிய சுதந்திரப் போராட்ட இயக்கத்தை காஷ்மீர் மக்கள் தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் ஜாவெத் பாஜ்வா, ‘இந்திய அரசின் அடக்குமுறை, அட்டூழியங்களை எதிர்த்து பர்ஹான் வானி மற்றும் பல தலைமுறையினர் செய்துள்ள உயிர்தியாகம் அவர்களது கொள்கை உறுதியை தெளிவுப்படுத்தும் தீர்மானமாகவும் சாட்சியமாகவும் அமைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News