செய்திகள்

சீன நிலச்சரிவில் மாயமான 93 பேரின் நிலை என்ன? இடிபாடுகளுக்கு நடுவே கதறி அழும் உறவினர்கள்

Published On 2017-06-26 06:29 GMT   |   Update On 2017-06-26 06:29 GMT
சீனாவில் நிலச்சரிவில் சிக்கி மாயமான 93 பேரை தேடும் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு நடுவே மாயமானவர்களின் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றனர்.
பீஜிங்:

சீனாவின் தென்மேற்கு பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் மாவோக்ஸியன் கவுண்டியில், சின்மோ என்ற மலைப்பாங்கான கிராமம் உள்ளது. இந்த கிராமம், திபெத்தையொட்டிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு பலத்த மழை பெய்து வந்த நிலையில், அந்த கிராமத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி அதிகாலையில், பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் 60 வீடுகள் தரை மட்டமாகின. அவற்றில் வசித்து வந்த நூற்றுக்கும் அதிகமானோர் மண்ணோடு மண்ணாக உயிரோடு புதைந்தனர். முதற்கட்ட தகவலின்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர். 93 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 93 பேரை தேடும் பணிகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு நடுவே மாயமானவர்களின் உறவினர்கள் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். 

மீட்பு பணிகளில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு படை வீரர்களும், தொழில் முறை மீட்பு படையினர் பலரும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அப்பகுதி மக்களும் இணைப்பு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News