செய்திகள்

சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை நெருங்கிய அமெரிக்க ஆதரவு படை

Published On 2017-06-24 08:42 GMT   |   Update On 2017-06-24 08:42 GMT
ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகரை அமெரிக்கா ஆதரவு படையான குர்துஸ் படை புரட்சி படையினர் நோக்கி முன்னேறி வருகிறார்கள்.
டமாஸ்கஸ்:

சிரியா, ஈராக் நாட்டில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் தலைநகராக சிரியாவில் உள்ள ராக்கா நகரை வைத்துள்ளனர்.

ஏற்கனவே ஈராக்கில் பல பகுதிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பெரும் பாலான இடங்களை ஈராக் ராணுவம் மீட்டு விட்டது. கடைசியாக மொசூல் நகரம் மட்டுமே அவர்களின் பிடியில் இருந்தது.

தற்போது அந்த நகரின் பெரும் பகுதியை ஈராக் கைப்பற்றி விட்டது. குறுகிய நகர பகுதி மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருக்கிறது.

விரைவில் இந்த நகரில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு விடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து விடுபட்டால் அதன் பிறகு ஈராக்கில் எந்தவொரு இடத்திலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இருக்க மாட்டார்கள். முழு ஈராக் பகுதியும் ஈராக் கட்டுப்பாட்டில் வந்து விடும்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடும் நெருக்கடியில் இருக்கும் அதே நேரத்தில் சிரியாவிலும் அவர்களுக்கு இப்போது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

அந்த நாட்டில் ஏற்கனவே அவர்களிடம் இருந்த பல பகுதிகளை மீட்டு விட்டனர்.

இப்போது பல்மேரா, ராக்கா, ஜஸ்ரா நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அதில், அவர்களின் தலைநகரம் ராக்காவை மீட்க அமெரிக்கா ஆதரவு படையான குர்துஸ் படை புரட்சி படையினர் அந்த நகரை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.

இப்போது ராக்கா நகரில் இருந்து சில மீட்டர் தூரத்தில் தான் இந்த படையினர் இருக்கிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் ராக்கா நகருக்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படைகள், ராக்கா அருகே வந்து விட்டதையடுத்து ராக்கா நகருக்குள் இருந்த பொதுமக்கள் பலர் அங்கிருந்து தப்பி வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

அவர்களிடம் கேட்ட போது, ராக்கா நகருக்குள் தற்போது 3 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் வரை உள்ளனர். மற்றவர்கள் வெளியேறி விட்டனர் என்று கூறினார்கள்.

இனியும் ராக்கா நகரை தக்க வைக்க முடியாது என கருதி அவர்கள் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் அங்கு இரு தரப்புக்கும் கடும் சண்டை நடக்கலாம் என கருதுகின்றனர்.

ஏற்கனவே மொசூல் நகரம் மீட்கப்படும் நிலையில் இருக்கிறது. ராக்கா நகரமும் மீட்கப்பட்டு விட்டால் அதன் பிறகு இரு நாட்டிலுமே ஐ.எஸ். தீவிரவாதிகள் நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் முற்றிலும் அழிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Tags:    

Similar News