செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் மாயம் - தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் கோரிக்கை

Published On 2017-05-17 07:12 GMT   |   Update On 2017-05-17 07:12 GMT
அமெரிக்காவின் லெக்ஸிங்டன் நகரில் கடந்த வாரம் காணாமல் போன 26 வயது இந்திய - அமெரிக்க வாலிபர் தொடர்பாக விபரம் தெரிந்தவர்கள் தகவல் அளித்து உதவுமாறு பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் மாஸாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தம்பதியர், தங்களது மகனான ராம் ஜெயக்குமார் (26) காணாமல் போனதாக லெக்ஸிங்டன் நகர போலீசில் புகார் அளித்திருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் வீட்டை விட்டு காரில் சென்ற ராம் ஜெயக்குமார் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாக  கூறியிருந்தார் என தங்களது புகார் மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், மறுநாள் ஆகியும் ராம் ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது கார் பாஸ்டன் நகரில் சார்லஸ் நதிக்கரை ஓரம் உள்ள ஒரு தெருவில் அனாதையாக கிடந்ததை கண்டதாகவும் குறிப்பிட்டிருந்த ஜெயக்குமாரின் பெற்றோர், மாயமான தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போலீசாரை கேட்டுக் கொண்டனர்.

காணாமல் போன ராம் ஜெயக்குமார் இந்திய அமெரிக்க நடிகையான பூர்ணா ஜெகநாதன் என்பவரின் உறவினர் ஆவார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள நடிகை பூர்ணா ஜெகநாதன், மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படும் ராம் ஜெயக்குமாரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக போலீசாரை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டுள்ளார்.

லெக்ஸிங்டன் நகர போலீசாரும் பொதுமக்களுக்கு இதே வகையிலான வேண்டுகோளை விடுத்துள்ளனர். அதில், ராம் ஜெயக்குமாரின் உயரம், எடை மற்றும் அங்க அடையாளங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News