செய்திகள்

புத்த பூர்ணிமா விழா: பிரதமர் மோடி நாளை இலங்கை பயணம்

Published On 2017-05-10 10:03 GMT   |   Update On 2017-05-10 10:03 GMT
சர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிறார். தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
கொழும்பு:

உலகம் முழுவதிலும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர், கவுதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனிதநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். புத்தர் பிறந்தநாளாகவும், ஞானம் பெற்று முக்திப்பேற்றினை எய்திய தினமாகவும், புத்த மதத்தினரின் புத்தாண்டாகவும் ‘வேசக்’ தினம் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தினம் புத்த பூர்ணிமா என்றழைக்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டின் வேசக் தினத்தையொட்டி வரும் 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை புத்தமதம் தொடர்பான மாபெரும் சர்வதேச மாநாடு ஒன்றை புத்த மதத்தினர் அதிகமாக வாழும் இலங்கையில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.

புத்த மதத்தவர்கள் பரவலாக வாழ்ந்துவரும் நூற்றுக்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த சுமார் 400 முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைப்பதற்காக நாளை (வியாழக்கிழமை) மாலை பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகிறார்.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் மோடி, இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

இங்குள்ள தமிழக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றும் வகையில் மாபெரும் பொதுகூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோரும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்யும் மோடி, வெள்ளிக்கிழமை இரவு டெல்லி திரும்புகிறார். அவரது வருகையையொட்டி தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் மத்திய மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News