செய்திகள்

வடகொரியா விவகாரம்: அமெரிக்கா-சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் ஆலோசனை

Published On 2017-04-29 15:54 GMT   |   Update On 2017-04-29 15:54 GMT
அமெரிக்கா மற்றும் சீன வெளியுறவுத் துறை மந்திரிகள் இன்று சந்தித்து, வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
நியூயார்க்:

உலக நாடுகளை அச்சுறுத்தும் விதத்தில் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. இதன் காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையிலும், வடகொரியா தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தங்கள் நாட்டின்மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருவதாக குற்றம்சாட்டி வரும் வடகொரியா, அமெரிக்காவை அழித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. வட கொரியாவின் இந்த மோதல் போக்கு பெரும் சேதத்தில் போய் முடியும் என்றும், பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றிபெறாவிட்டால், பெரிய மோதல் வெடிக்கும் என அஞ்சுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திர் டில்லர்சன், அணு ஆயுதங்களை கொரிய தீபகற்பத்தில் இருந்து அகற்றுவதற்காக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் உண்மை என்று கூறிய அவர், தேவைப்பட்டால் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தின் இடையே, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை சந்தித்தார். அப்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அகற்றுவதில் உள்ள சவால்கள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக இரு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து விவாதித்தனர்.

அமைதியான தீர்வுதான் சரியான தீர்வாக அமையும் என்று வடகொரியாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவு மந்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News