செய்திகள்

அணு ஆயுத சோதனையை கைவிட மாட்டோம்: வடகொரியா அறிவிப்பு

Published On 2017-04-28 00:26 GMT   |   Update On 2017-04-28 00:26 GMT
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது என வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன் தெரிவித்துள்ளார்
பியாங்யாங்:

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.

புதிதாக மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வடகொரியாவுக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ளார். இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஆனால் வடகொரியா கொஞ்சமும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக இல்லை.

இந்த நிலையில் வடகொரிய அரசின் மூத்த அதிகாரி சோல் வோன், சி.என்.என். டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். இது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த பேட்டியின்போது அவர், “வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் ஒருபோதும் நிறுத்தப்படாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மனோபாவம் தொடர்கிற வரை எங்களது அணு ஆயுத சோதனையும் தொடரும்” என குறிப்பிட்டார்.

மேலும், “எங்கள் அணு ஆயுத பலத்தை வலுப்படுத்துவதற்கு, அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று” என்றும் அவர் கூறினார்.

Similar News