செய்திகள்

8-வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் ‘ரொமான்ட்டிக்’ நகரில் நடைபெறும்

Published On 2016-10-18 06:33 GMT   |   Update On 2016-10-18 06:33 GMT
8-வது பிரிக்ஸ் மாநாடு அடுத்த ஆண்டு சீனாவின் ‘ரொமான்ட்டிக்’ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

மாநாடு நடைபெறும் இடங்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் விருப்பப்படி, சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றன. அவ்வகையில், கடந்த (2015) ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷியாவில் உள்ள உஃபா நகரில் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலில் அகரவரிசைப்படி இடம்பெற்றுள்ள இந்தியா இந்த ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை கோவாவில் உள்ள பெனாலிம் பகுதியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்த வேண்டியது சீனாவின் பொறுப்பாகும். இந்நிலையில், கோவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீன அதிபர் க்சி ஜின்பிங், பிரிக்ஸ் அமைப்பின் 8-வது உச்சி மாநாடு சீனாவில் உள்ள கடலோர நகரமான க்சியாமென் நகரில் நடைபெறும். இந்த மாநாடு பிரிக்ஸ் அமைப்புக்கான ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும் என குறிப்பிட்டார்.

சீனாவின் பியூஜியான் மாகாணத்தின் திபெத் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் க்சியாமென் நகரம் உலகின் மிகவும் ‘ரொமான்ட்டிக்’ நகரமாக கடந்த 2011-ல் தேர்வாகியிருந்தது, நினைவிருக்கலாம்.

Similar News