செய்திகள்

ஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை?

Published On 2016-08-26 09:13 GMT   |   Update On 2016-08-26 09:14 GMT
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றதால் வடகொரியா விளையாட்டு வீரர்கள் இனி நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பியாங்யாங்:

ரியோ டி ஜெனீரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வடகொரியா இரண்டு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது. ஆனால், எதிரிநாடான தென் கொரியா ஒன்பது தங்கம் உள்பட 21 பதக்கங்களை வென்றுள்ளது, வடகொரியாவை கடுப்பேற்றியுள்ளது.

இதனால் வடகொரியா அதிபரான சர்வ வல்லமை படைத்த கிம் ஜோங் உன், மிகுந்த கோபம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒலிம்பிக் பதக்கம் வெல்லாத வடகொரியா வீரர்களுக்கு அரசு வழங்கும் வீடுகளின் தரத்தை குறைத்தல் மற்றும் ரேஷன் மூலம் வழங்கப்படும் பொருட்களின் அளவுகளை குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது. மேலும், அவர்கள் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்யவும் அனுப்பப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர், அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன், 5 தங்கம் உள்பட குறைந்தது 17 பதக்கங்களாவது வென்றுவர வேண்டும் என வடகொரியா வீரர்களுக்கு அறிவுறித்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணியிடம் வடகொரியா 7-0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இதனால் வடகொரிய கால்பந்து வீரர்கள் நிலக்கரி சுரங்க வேலைக்கு அனுப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

Similar News