தமிழ்நாடு

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம்- கவர்னர் உரையில் தகவல்

Published On 2023-01-09 06:23 GMT   |   Update On 2023-01-09 06:23 GMT
  • வடகிழக்கு பருவமழை, மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றியது.
  • காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் படிக்கும் 1.45 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

சென்னை:

ஆண்டுதோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது.

சட்டசபை கூட்டத்தில் உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

சட்டசபை உள்ளே வந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் அமர்ந்தார். சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் எழுந்து நிற்க தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அதன் விவரம் வருமாறு:-

சட்டசபையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.

தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்குபவர்களுக்கு நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

தமிழ்நாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறார். தமிழர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

வன வளங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்களின் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு தடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, மாண்டஸ் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றியது.

இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு முகாம்கள் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டக்கூடாது.

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்சினையை தமிழ்நாடு அரசு முறையாக கையாண்டு வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக நடத்தியது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

149 பெரியார் சமத்துவ புரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1545 பள்ளிகளில் படிக்கும் 1.45 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 தரப்படுகிறது.

நான் முதல்வன் திட்டம் மூலம் 3 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மினி டைட்டல் பார்க் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது. ஐ.டி. நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நிறுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் 17 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டு 16.2 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News