தமிழ்நாடு

தமிழக மீனவர்களை கடத்தி செல்லும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?- வைகோ கேள்வி

Published On 2022-07-05 06:43 GMT   |   Update On 2022-07-05 09:27 GMT
  • இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது?
  • தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்ததுடன், மீன்பிடிக் கருவிகள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

மீன்பிடித் தடைக் காலம் முடிந்து தற்போது மீண்டும் கடலுக்குச் சென்ற மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர்.

பொருளாதாரத்தில் நிலைகுலைந்து போயுள்ள இலங்கைக்கு, இந்தியா வாரி வாரி வழங்கியபோதும் சிங்கள அரசு, இந்திய மீனவர்களை வேட்டையாடுவதைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து, கண்டனம் தெரிவிக்காமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து கைது செய்து, இலங்கை சிறையில் அடைக்கும் சிங்கள அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப் போவது எப்போது?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News