தமிழ்நாடு

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: டி.ஜி.பி. எச்சரிக்கை

Published On 2022-09-25 08:50 GMT   |   Update On 2022-09-25 13:55 GMT
  • தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
  • சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திலும் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் தாம்பரம், ஈரோடு, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

தாம்பரத்தை அடுத்த சிட்லப்பாக்கத்தில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சீதாராமன் வீட்டில் அதிகாலை நேரத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதே போன்று பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷாராக இருக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இரவு ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 22-ந்தேதி சோதனை மேற் கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின் போது 11 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1,410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மண்எண்ணை நிரப்பிய பாட்டில்களை சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறி வைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மண்எண்ணை பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் ஆர்.ஏ.எப். இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.

Similar News