தமிழ்நாடு

நீட் விலக்கு சட்டம்: மத்திய அரசின் கருத்துக்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்- அன்புமணி கோரிக்கை

Published On 2022-07-20 06:45 GMT   |   Update On 2022-07-20 09:23 GMT
  • நீட் விலக்கு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு பகிர்ந்து கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை சில கருத்துகளை கூறியிருப்பதாகவும், அவை குறித்த விளக்கங்களைக் கோரி தமிழ்நாடு அரசுக்கு அவற்றை அனுப்பி வைத்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம் கோரி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்து விட்ட நிலையில், அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

அது குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு பகிர்ந்து கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஒருவேளை மத்திய அரசின் கருத்துகள் சாதக மானவையாக இருந்தால், அது மாணவர்கள் மத்தியில் அச்சத்தைப் போக்கியிருக்கும், 3 மாணவர்களின் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதன் மூலமாக மட்டும் தான் மாணவர்கள் தற்கொலைகளையும், கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியையும் தடுத்து நிறுத்த முடியும். எனவே, நீட் விலக்கு சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகளின் விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

அத்துடன் மத்திய அரசின் கருத்துகள் குறித்த விளக்கங்களை உடனடியாக அனுப்பி வைத்து நீட் விலக்கு சட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News