தமிழ்நாடு

தென்மாவட்டங்களில் ஓ.பி.எஸ்.சை வீழ்த்த இ.பி.எஸ். வியூகம்

Published On 2022-09-30 05:33 GMT   |   Update On 2022-09-30 05:34 GMT
  • முதற்கட்டமாக மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
  • பிரசார வாகனத்தில் எழுந்து நின்று மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரட்டை விரல்களை காண்பித்தவரே மக்கள் வெள்ளத்தில் எடப்பாடி பழனிசாமி நீந்தி சென்றார்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கினாலும் தென் மாவட்டங்களில் தங்களுக்குத்தான் செல்வாக்கு இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வருகிறார்கள்.

ஆனால் தென்மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். எனவே ஓ.பன்னீர்செல்வத்தை தென் மாவட்டங்களிலும் வீழ்த்தி தன் பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். இதை 'ஆபரேசன் சவுத்' என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

அதில் முதற்கட்டமாக மதுரை, சிவகாசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

காலை 7 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் சென்றடைந்தார். அதிகாலையிலேயே அவரை வரவேற்க ஏராளமானவர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தார்கள்.

விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி .உதயகுமார் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மா.பா.பாண்டியராஜன், விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, மற்றும் மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், முனியசாமி உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ரிங் ரோடு வழியாக பிரசார வாகனத்தில் மேலக்கோட்டை அருகே சென்றபோது ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் சாலையின் இருபுறமும் சித்திரை திருவிழா போல் மக்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர்

பிரசார வாகனத்தில் எழுந்து நின்று மக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு இரட்டை விரல்களை காண்பித்தவரே மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்றார்.

சிவரக்கோட்டை பகுதியில் விவசாயிகள் ஏராளமாக திரண்டு விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் சிறக்க பல்வேறு திட்டங்களை வழங்கியும், தொடர்ந்து கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சிப்காட்டுக்கு எதிரான அரசாணை ரத்து செய்து எங்கள் விளைநிலங்களை பாதுகாத்த எடப்பாடியார் வாழ்க என்று கோஷமிட்டனர்,

கள்ளிக்குடியில் பிரம்மாண்ட முறையில் எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொழிலாளர்களும், இளைஞர்களும் திரண்டு இருந்தனர்.

மாலையில் சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து எடப்பாடி பழனிசாமி பேச்சை கேட்டனர். இதை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவருக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த கூட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் வருங்கால முதல்வர் என்றும் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். முதல்முறையாக சென்ற தென்மாவட்ட சுற்றுப் பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமைந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை உற்சாகப்படுத்தியது.

இரவு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு அவர் காரில் சேலம் சென்றார்.

Tags:    

Similar News