தமிழ்நாடு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2023-10-31 08:03 GMT   |   Update On 2023-10-31 08:03 GMT
  • திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்று மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.
  • வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.

இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வரவில்லை. அராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது.

இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க.வுக்கு, வருகின்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News