தமிழ்நாடு

திட்டமிடாமல் வந்தது அம்மா உணவகம்: திட்டமிட்டு வந்தது காலை உணவு திட்டம்- அமைச்சர் விளக்கம்

Published On 2023-08-25 08:00 GMT   |   Update On 2023-08-25 08:00 GMT
  • சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
  • முதலமைச்சர் காலை உணவு திட்டம் முறையாக திட்டமிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் காலை உணவு திட்டம் முறையாக திட்டமிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகங்கள் நல்ல திட்டமாக இருந்தாலும் முறையான திட்டமிடல் எதுவும் இல்லை. அதற்காக தனியாக துறை இல்லை. நிதி இல்லை. வாகன வசதி இல்லை.

செயற்பொறியாளர் ஒருவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருப்பார். அவரிடம் சாலை பிரச்சினைகள் பற்றிதான் வயர்லெசில் பேசுவார்கள். ஆனால் அப்போது கொருக்குபேட்டையில் சாம்பார் தீர்ந்து விட்டது அனுப்பி வையுங்கள். தண்டையார்பேட்டையில் இட்லி காலியாகிவிட்டது. சவுகார்பேட்டையில் இருந்து நூறு இட்லி அனுப்புங்கள்.

சவுகார்பேட்டையில் இருந்து 100 இட்லி அனுப்புங்கள் என்று தான் வயர்லெசில் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிகாரிகளால் வேறு வேலையே பார்க்க முடியவில்லை.

ஆனால் காலை உணவு திட்டம் அப்படி அல்ல. அதற்கான பயனாளிகள் கணக்கிடப்பட்டு ரூ.404 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. எத்தனை மையங்களில் சமைப்பது? எவ்வளவு ஹாட் பாக்ஸ்களில் கொண்டு செல்வது? தேவைப்படும் வாகனங்கள் எத்தனை? என்று எல்லாமே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.

இந்த மாந்தோப்பு பள்ளியில் 1073 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு தட்டு மற்றும் தம்ளர்களை மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார்.

இதே போல் சென்னை முழுவதும் வாங்கி கொடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் காலை உணவு விரிவாக்கத்தை திருவொற்றியூர் மண்டலம் 6-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் எம்.சாமுவேல் திரவியம், கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவொற்றியூர் தேரடியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News