தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்திய பிரேமலதா

Published On 2024-05-11 16:28 IST   |   Update On 2024-05-11 16:28:00 IST
  • விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
  • பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா மே 9 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.

விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை பெற்று வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தொண்டர்கள் வரவேற்றனர்.

அதன்பின்பு விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி செல்ல முற்பட்டார். அவருக்கு பின்பாக தேமுதிக தொண்டர்களும் வாகன பேரணி செல்ல முயன்றனர். பிரேமலதா வாகனத்திற்கு மட்டும் தான் பேரணி செல்ல அனுமதி அளித்த காவல்துறையினர் தேமுதிகவினரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்தனர்.

காவல்துறையின் அனுமதியை மீறி பேரணியாக செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனால் காவல்துறையினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் சாலை மார்க்கமாக கோயம்பேடு வந்தடைந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருதை வைத்து மரியாதை செலுத்தினார். 

Tags:    

Similar News