திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: இன்று முதலமைச்சரை சந்திக்கும் கே.சி.வேணுகோபால்!
- முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது.
- கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
தமிழ்நாடு தேர்தல் களத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று முறைப்படி தொடங்கியுள்ளது. தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
முதற்கட்டமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முஸ்லீம் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், திமுக 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளது. நாளை மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. நாளை மறுநாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்நிலையில் இன்று காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முகுல் வாஸ்னிக் மற்றும் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.