தமிழ்நாடு

கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1,400 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2023-01-03 03:32 GMT   |   Update On 2023-01-03 03:32 GMT
  • 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  • வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்.

மதுரை:

பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்திலுள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் அரசின் பொது வினியோக திட்ட ரேஷன் பொருட்களான ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க வேண்டி மதுரை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையில் பணிபுரியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அதில் 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய இதரப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குடிமைப்பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தம் 695 கைப்பற்றப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது போல் வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News