தமிழ்நாடு

தமிழக அரசை கண்டித்து சிவகங்கையில் 12-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2024-01-05 07:49 GMT   |   Update On 2024-01-05 07:49 GMT
  • தி.மு.க. அரசின் இதுபோன்ற செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் குடிநீர் வரி 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், அதே போல், சொத்து வரியும் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், இந்நகராட்சியில் முறையாக குப்பைகள் அகற்றப்படாத காரணத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருவதாகவும், புதிய குப்பை கிடங்கிற்கு இடம் தேர்வு செய்யப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுவதற்கு வரியை மட்டும் போடுவதாகவும், மக்களின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு புதிய குப்பை கிடங்கை அமைக்காமல் இருப்பதாகவும், பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கும் டெபாசிட் மற்றும் வரி விதிக்கப்படுவதாகவும், குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசின் இதுபோன்ற செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிவகங்கை நகராட்சியில் குடிநீர் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பைகள் முறையாக அகற்றப்படாதது, முறையற்ற வகையில் வரி வசூல் செய்வது, குடிநீர் முறையாக வழங்கப்படாதது முதலானவற்றிற்குக் காரணமான தி.மு.க. அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மக்களின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு புதிய குப்பை கிடங்கு அமைத்தல் மற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சிவகங்கை மாவட்டத்தின் சார்பில், வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமையிலும், முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்டக் செயலாளர் செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Tags:    

Similar News