தமிழ்நாடு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முன்னிலையில் லியோ என்.சுந்தரம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார்

அ.தி.மு.க.வில் மரியாதை இல்லாததால் பா.ஜனதாவில் இணைந்தேன்- லியோ சுந்தரம் பேட்டி

Published On 2022-08-09 09:41 GMT   |   Update On 2022-08-09 09:41 GMT
  • சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டு தேர்தலில்போது காரப்பாக்கத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு 5,524 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் லியோ சுந்தரம்.
  • சுயேட்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க., தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி அதிக வாக்கு வித்தியாசத்தில் லியோ சுந்தரம் வெற்றி பெற்றார்.

சென்னை:

சென்னை மாநகராட்சி 198-வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருடன் முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் புருசோத்தமன், அன்பழகன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

பா.ஜனதாவில் சேர்ந்தது பற்றி லியோ சுந்தரம் கூறுகையில், 'அ.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை. சுயநலத்துக்காக அ.தி.மு.க.வில் சிலர் செயல்படுகின்றனர்.

இதுபற்றி கட்சி தலைமையிடம் எடுத்துச்சொல்லியும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையிலும் கட்சி தொண்டர்களை அரவணைக்க தலைமை தவறிவிட்டது. இனி இவர்களை நம்புவது பிரயோஜனம் இல்லை என்பதால் பா.ஜனதா கட்சியில் இணைந்தேன். இங்கு எங்களுக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளது.

இவ்வாறு லியோ சுந்தரம் கூறினார்.

சென்னை மாநகராட்சியின் 198-வது வார்டு தேர்தலில்போது காரப்பாக்கத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு 5,524 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் லியோ சுந்தரம். சோழிங்கநல்லூர் 15-வது மண்டல குழு தலைவராகவும் இருந்தவர்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதா இவரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கினார். இவர் அ.தி.மு.க.வில் தொகுதி கழக செயலாளர் மற்றும் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் மாவட்ட கழக பொருளாளராகவும் பொறுப்புகளை ஏற்று கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டார். 2021 மாநகராட்சி தேர்தலில் இவருக்கு கவுன்சிலர் சீட்டு வழங்காமல் கட்சி புறக்கணித்தது.

இதனால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க., தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தபோது பா.ஜ.க. துணை தலைவர் கரு.நாகராஜன், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

லியோ சுந்தரம் விரைவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சோழிங்கநல்லூர் தொகுதியில் இருந்து பா.ஜ.க.வில் சேர்க்க உள்ளார்.

Tags:    

Similar News