தமிழ்நாடு

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி நடக்கிறது- காங்கிரஸ் கட்சி விளக்கம்

Update: 2022-07-03 08:40 GMT
  • எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்தி ரகசியமாக பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை.
  • தி.மு.க.-காங்கிரஸ் உறவில் எந்த சிறு உரசலும் கிடையாது. நன்றாக புரிந்துணர்வுடன் இருக்கிறோம்.

சென்னை:

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இருவரும் மாநில வாரியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

பெரும்பாலான கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக இருப்பதால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதற்கிடையே யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்களும் ஓசையின்றி ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு மாநில கட்சி தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

சமீபத்தில் அவர் அ.தி.மு.க. தலைமை கழக செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியையும் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அ.தி.மு.க. தரப்பில் யாரும் மறுக்காததால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை தொடர்ந்து மேலும் பல்வேறு தகவல்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியாகி உள்ளன. தி.மு.க. மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அணி மாற யோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்தி பேசினார் என்று தகவல் பரவி உள்ளது.

ஆனால் தேர்தல்களில் தி.மு.க.வை அச்சுறுத்தி கூடுதல் இடங்கள் பெறவே ராகுல் இப்படி காய் நகர்த்து வதாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. இதை தி.மு.க. மூத்த தலைவர்கள் மறுத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர்கள் இது தொடர்பாக விளக்கம் அளித்தனர். தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'எடப்பாடி பழனிசாமியுடன் ராகுல் காந்தி ரகசியமாக பேச வேண்டும் என்ற அவசியமே இல்லை. அந்த தகவல் உண்மைக்கு மாறானது. இதில் ஏதோ சதி இருப்பது போல் தோன்றுகிறது' என்று கூறினார்.

மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுகையில், 'தி.மு.க.-காங்கிரஸ் உறவில் எந்த சிறு உரசலும் கிடையாது. நன்றாக புரிந்துணர்வுடன் இருக்கிறோம். இதில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை இதன் மூலம் பலவீனப்படுத்த நினைக்கிறார்கள்.

அவர்களது திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்' என்று கூறினார்.

Tags:    

Similar News