தமிழ்நாடு

மனு கொடுக்க குடும்பத்தினருடன் வந்திருந்த ராணுவ வீரர்கள்.

ராணுவ வீரர்களை குறி வைத்து அதிக லாபம் தருவதாக ஆசை காட்டி பல லட்சம் மோசடி

Published On 2023-09-21 08:51 GMT   |   Update On 2023-09-21 08:52 GMT
  • பணம் செலுத்திய பின் 2 மாதங்களுக்கு மட்டுமே கூறியபடி பணம் கிடைத்துள்ளது.
  • நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மதுரை:

ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு யுனிக் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருக்கக்கூடிய பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களிடம் ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் 2 தவணையாக மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 10 மாதத்தில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு தவணையாக 75 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்தில் 7 லட்சத்தி 50 ஆயிரம் கிடைக்கும் என்றும், ரூ.5 லட்சம் செலுத்தினால் ஒரே தவணையாக 18 மாதத்தில் ரூ.15 லட்சம் கிடைக்கும் என்றும், ரூ.25 லட்சம் செலுத்தினால் 5 வருடத்திற்கு வருடத்தில் 4 தவணையாக ரூ.83 லட்சம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான ராணுவ வீரர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பணம் செலுத்திய பின் 2 மாதங்களுக்கு மட்டுமே கூறியபடி பணம் கிடைத்துள்ளது. அதன் பின்பு தவணை தொகை கொடுக்கப்படவில்லை. 2 வருடங்கள் ஆகியும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

'இந்த நிலையில் தாங்கள் இழந்த பணத்தை பெற்றுத் தரக்கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மதுரை மாவட்ட கலெக்டரிடம் முதலீடு செய்த ராணுவ வீரர்கள் மனு அளித்தனர்.

மேலும் அந்த நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ராணுவ வீரர்கள் சிறிது காலம் மட்டுமே குடும்பத்துடன் இருப்பார்கள் என்பதால் அவர்களால் நிறுவனம் குறித்து விசாரிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு அவர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி உள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர். 

Tags:    

Similar News