தமிழ்நாடு

சட்டவிரோத கழிவுநீர் இணைப்புக்கு ரூ.30 லட்சம் அபராதம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2022-06-29 06:23 GMT   |   Update On 2022-06-29 06:23 GMT
  • மழைநீர் வடிகால்கள் மழைக்காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும்.

சென்னை:

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மழைநீர் வடிகால்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சியின் சார்பில் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மழைநீர் வடிகால்கள் மழைக்காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் மழைநீர் வடிகால்களில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ரூ.5,000 அபராதமும், நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் 1.4.2022 முதல் 27.6.2022 வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 5,725 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.30 லட்சத்து 56 ஆயிரத்து 570 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News