தமிழ்நாடு

ஆன்லைன் தடை சட்டத்திற்கு கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Published On 2023-03-26 06:02 GMT   |   Update On 2023-03-26 06:06 GMT
  • ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
  • ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை கவர்னர் உணர வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

திருவெறும்பூர் துப்பாக்கித் தொழிற்சாலை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட ரூ.7 லட்சம் கடனை அவரது தாயார் அடைத்துள்ளார். அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்ட மோகத்திலிருந்து மீள முடியாத ரவிச்சந்திரன் மேலும் பல லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் எவ்வாறு அதற்கு அடிமையான ஒருவரை கடனாளியாக்கி, தற்கொலை செய்து கொள்ள வைக்கும் வரை விடாது என்பதற்கு ரவிச்சந்திரனின் வாழ்க்கை தான் சான்று. அதனால் தான் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 48-வது தற்கொலை இது. திருப்பி அனுப்பப்பட்ட சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த 19-வது தற்கொலை. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிகழ்ந்த முதல் தற்கொலை. இது தொடர் கதையாகி விடக்கூடாது.

ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதை கவர்னர் உணர வேண்டும். எனவே, இனியும் ஒரு நாள் கூட தாமதிக்காமல் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக கவர்னர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News