தமிழ்நாடு
அம்மா உணவகம்

சென்னை மாநகராட்சி 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி

Published On 2022-06-03 07:06 GMT   |   Update On 2022-06-03 07:06 GMT
அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி மூலம் 281 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என நடத்தப்படும் இப்பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி தொடங்கப்படுகின்றன.

ஆனாலும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அட்மிஷன் உறுதி செய்யப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிகளவு மாணவர்களை சேர்க்க மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் உள்ள பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுளது.

குழந்தைகள் வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு கலந்தாய்வு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் கிடைக்கும் சலுகைகள், கல்வி உபகரணங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்க காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளி திறந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காலைஒ 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை அருந்திவிட்டு வகுப்பிற்கு செல்லவும் முடிவு செய்யப்படுகிறது.

அம்மா உணவகங்களில் இருந்து விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News