தமிழ்நாடு
நகைகள்

மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளை- 2 பேரை பிடித்து போலீஸ் கிடுக்கிபிடி விசாரணை

Published On 2022-04-12 05:02 GMT   |   Update On 2022-04-12 06:07 GMT
மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநாவலூர்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவர் விளாத்திகுளத்தில் நடைபெற உள்ள திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் டெம்போ டிராவல்ஸ் வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது மகன் பெரியசாமி, மனைவி சித்ரா உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.

ஊருக்கு புறப்படும்போது நகை உள்பட முக்கிய பொருட்களை அட்டை பெட்டிகளில் கட்டி வேனின் மேல் பகுதியில் வைத்து சென்றுள்ளனர். ஊருக்கு செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்கசாவடி மைய பகுதியில் வேனை நிறுத்தி பொருட்கள் சரியாக உள்ளனவா? என்று பார்த்தனர்.

பின்னர் தியாகதுருகம் கூட்டுரோடு சின்னக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் ஒரு டீக்கடையில் வேனை நிறுத்தி விட்டு அனைவரும் டீ குடித்தனர். அப்போது பார்த்தபோது வேனின் மேல் இருந்த ஒரு அட்டை பெட்டி மாயமாகி இருந்தது தெரியவந்தது.

அந்த அட்டைபெட்டியில் 264 பவுன் தங்க நகைகள் இருந்ததது. அதிர்ச்சியடைந்த தங்கபெருமாள் இதுகுறித்து திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் சுங்கச்சாவடி, டீக்கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகை கொள்ளை போனது குறித்து துப்பு துலக்கப்பட்டது. ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதுதவிர வேனை ஓட்டிவந்த செங்கல்பட்டை சேர்ந்த டிரைவர் பாண்டியிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இன்று அதிகாலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பேர் நின்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நகை கொள்ளைபோனது தொடர்பாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News