தமிழ்நாடு
வழக்கு பதிவு

களக்காட்டில் ‘போஸ்டர்’ ஒட்டிய விவகாரம்- காதலியின் தந்தையை தாக்கியதாக நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்கு

Published On 2022-02-28 05:23 GMT   |   Update On 2022-02-28 05:23 GMT
காதலியுடன் சேர்ந்திருக்கும் படத்தையும், காதலி தனக்கு எழுதிய காதல் கடிதத்தில் ஒன்றை போட்டும், ‘காதல் என்னும் தேர்வு எழுதி காத்திருந்த வாலிபன் நான்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் வாலிபர் போஸ்டர் அடித்தார்.
களக்காடு:

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் விஜய்ரூபன். இவர் களக்காட்டில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

இவருக்கும், களக்காடு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்தது. மகளின் காதல் பற்றி அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த பெண் விஜய்ரூபனுடனான தனது காதலை துண்டித்தார். அவரை சந்திப்பதையும் நிறுத்தினார். இதனால் விஜய்ரூபன் வேதனையில் துடித்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த பெண்ணுக்கும் வேறு நபருக்கும் நிச்சயம் செய்யப்பட்டது. இதை அறிந்த விஜய்ரூபன் காதலி கை விட்டதை எண்ணி மனம் வருந்தினார். அத்துடன் காதலியை பழி தீர்க்க எண்ணினார். காதலிக்கும் போது, விஜய்ரூபனும், அந்த பெண்ணும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அதை பத்திரப்படுத்தி வைத்திருந்த விஜய்ரூபன், காதலியுடன் தான் சேர்ந்திருக்கும் படத்தையும், காதலி தனக்கு எழுதிய காதல் கடிதத்தில் ஒன்றை போட்டும், ‘காதல் என்னும் தேர்வு எழுதி காத்திருந்த வாலிபன் நான்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் போஸ்டர் அடித்தார். காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அந்த போஸ்டரை களக்காடு பகுதி முழுவதும் ஒட்டினார்.

மேலும் அந்த பெண்ணின் ஊரிலும், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் ஊரிலும் கூடுதலாகவே போஸ்டரை ஒட்டினார். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக காதலியின் தந்தை, களக்காடு போலீசில் அளித்துள்ள புகாரில் பள்ளி பருவத்தில் தனது மகளும், விஜய்ரூபனும் ஒன்றாக படித்ததாகவும், தற்போது தனது மகளை திருமணம் செய்ய விஜய்ரூபன் பெண் கேட்டு வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும் பெண் கொடுக்க மறுத்து விட்டதால், விஜய்ரூபன் தன்னை தாக்கி, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் விஜய்ரூபன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News