தமிழ்நாடு
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று சட்டசபை கூடுகிறது

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

Published On 2022-01-05 00:10 GMT   |   Update On 2022-01-05 00:10 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்தில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால், கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கத்திற்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கத்திற்கு அழைத்து வருவார்கள். பின்னர், சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமருவார். அவருக்கு வலதுபுறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவு, இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டிலும் அமருவார்கள்.

சரியாக காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அப்போது, அவையில் உள்ள அனைவரும் எழுந்து நிற்பார்கள். அதன்பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவடையும்.

தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News