தமிழ்நாடு
விபத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ் நொறுங்கி கிடந்த காட்சி.

தனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதல்- குடிநீர் ஆபரேட்டர் உள்பட 2 பேர் பலி

Published On 2021-12-02 04:13 GMT   |   Update On 2021-12-02 04:13 GMT
வேடசந்தூர் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா காளகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). இவர் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை இவர், காளகவுண்டன் பட்டியில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக சேவுராவூத்தனூரை சேர்ந்த மணிவேல் (37) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பழனிச்சாமி மீது மோதியது. இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த 108 ஆம்புலன்சில், பழனிச்சாமி ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு உதவியாக, கோவிலூரை சேர்ந்த உறவினர் வீரக்குமார் (26) என்பவரும் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் சென்றார். தொட்டணம்பட்டியை சேர்ந்த சங்கர் (46) ஆம்புலன்சை ஓட்டினார். மருத்துவ உதவியாளர் சத்யா (22) உடனிருந்தார்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் பழனிச்சாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக அதே 108 ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது, வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சித்தா மருத்துவ பிரிவில் பணிபுரியும் ஊழியர் சுமதி (30) என்பவரும் திண்டுக்கல் வருவதற்காக ஆம்புலன்சில் ஏறி கொண்டார். பழனிச்சாமி, வீரக்குமார், சத்யா, சுமதி ஆகியோருடன் 108 ஆம்புலன்ஸ் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது.

வேடசந்தூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் உள்ள ஒரு தனியார் மில் முன்பு ஆம்புலன்ஸ் வந்தது.

அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, அங்கு நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அந்த பஸ்சை, சின்னாளப்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் (29) ஓட்டினார்.

கண்இமைக்கும் நேரத்தில் தனியார் பஸ்சின் பின்பக்கத்தில், 108 ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இதில், ஆம்புலன்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் ஏற்கனவே, மோட்டார் சைக்கிள் மோதி காயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதேபோல் அவருக்கு உதவியாக ஆம்புலன்சில் வந்த வீரக்குமாரும் உயிரிழந்தார்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர், மருத்துவ உதவியாளர் சத்யா, சித்த மருத்துவ பிரிவு ஊழியர் சுமதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது நடந்த துயர சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News